இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு 3 உறுப்பினர் பதவிகளுக்கு அஜித் அகார்கர் உள்பட 4 பேர் போட்டி
இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவில் விரைவில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களான அஜித் அகார்கர், சேத்தன் சர்மா உள்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு உறுப்பினர் பதவி என்பது மிகவும் செல்வாக்கான பதவியாகக் கருதப்படுகிறது. தேர்வுக் குழுவில் தலைவர் உள்பட 5 உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது தலைவராக சுனில் ஜோஷி உள்ளார். இவர் தவிர ஹர்வீந்தர் சிங், தேவாங்க் காந்தி, சரண்தீப் சிங் மற்றும் ஜதின் பராஞ்பே ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோஷி மற்றும் ஹர்வீந்தர் சிங் ஆகிய இருவரும் சமீபத்தில் தான் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தேவாங்க் காந்தி, சரண்தீப் சிங் மற்றும் ஜதின் பராஞ்பே ஆகியோரின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது.
இதையடுத்து காலியாகும் இந்த 3 இடங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றது.கடந்த 15ம் தேதி தான் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியதற்கான கடைசி நாளாகும். இந்நிலையில் இந்த பதவிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களான அஜித் அகார்கர், சேத்தன் சர்மா சிவசுந்தர் தாஸ் மற்றும் மனீந்தர் சிங் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். சமீப காலம் வரை இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு உறுப்பினர்கள் மண்டலம் வாரியாகத் தான் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடைசியாகத் தேர்வு செய்யப்பட்ட தலைவர் சுனில் ஜோஷியும், ஹர்வீந்தர் சிங்கும் இந்த அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் மண்டலம் வாரியாக தேர்வுக் குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதனால் இம்முறை காலியாகும் 3 உறுப்பினர் பதவிகளுக்கு மண்டலம் வாரியாக நியமனம் செய்யப்பட மாட்டாது என்றே கருதப்படுகிறது. ஏராளமான சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள அஜித் அகார்கருக்கு உறுப்பினர் பதவி கண்டிப்பாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. வருங்காலத்தில் இவர் தேர்வுக்குழு தலைவராக வரவும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த முறையும் அஜித் அகார்கரும், மனீந்தர் சிங்கும் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர். ஆனால் அப்போது அவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.