காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம்: போராட்டக் களத்தில் இறங்கும் திரையுலகினர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர், நடிகைகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் என பல்வேறு பிரச்னைகள் தலையோங்கி நிற்கிறது. இதன் எதிரொலியாக, பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கலந்துக் கொள்ள இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர் நடிகைகள் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகிய 3 பேரும் நேற்று மாலை கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது இரண்டு விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி நம் உரிமை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகிறார்கள்.

இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இது தூத்துக்குடி மக்களின் பிரச்னை மட்டும் அல்ல. பொதுவான பிரச்னை. இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

அது உண்ணாவிரத போராட்டமா ? அல்லது வேறு மாதிரியான போராட்டமா ? என்பது ஓரிரு நாளில் அறிவிப்போம். இந்த போராட்டம் சென்னையில் நடைபெறும். இதுபோன்ற சமூக பிரச்னைகளுக்காக ஆவணப்படம் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, தமிழ் திறைப்படத்துறையில் நிலவி வரும் இக்காட்டான சூழ்நிலைகளுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு நடிகர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது.

தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>