சிறையிலிருந்து மீண்ட நடிகை மீண்டும் நடிக்க வருகிறார்..
சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. பாலிவுட் பிரபலம் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேர்களிடம் வரை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. மும்பை போலீஸ் விசாரித்து வந்த இந்த வழக்கு பிறகு சிபிஐக்கு மாறியது. சுஷாந்த் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் தந்தை போலீஸில் புகார் அளித்தார்.
அதில் சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியவர் ரியாதான் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் வழக்கின் கோணமே இதனால் மாறியது. போதை மருந்து வழக்கும் இதில் சேர்க்கப்பட்டது.
ரியா சக்ரபோர்த்தியிடம் போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். அவர் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலத்தில் தெரிவித்தார். நடிகைகள் சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்த கபூர் ஆகியோரை போதை வழக்கில் சிக்க வைத்தார். அவர்களிடமும் போதைப் பொருள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ரியா. அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றார். அதேசமயம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) ரியா வீட்டில் எந்த மருந்துகளையும் கண்டுபிடிக்கவில்லை என்று சில திடுக்கிடும் அறிக்கைகளையும் வெளியிட்டது.ஒரு வழியாக ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்தபின் ரியா இதுநாள் வரை மவுனமாக இருந்தார்.
தற்போது மீண்டும் தனது சினிமா வாழ்க்கையில் ரீ என்ட்ரி தர முடிவு செய்திருக்கிறார். அவர் படங்களில் நடிக்க முயல்வதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.ரியா ஏற்கனவே தெலுங்கு படமான துனீகா துனீகா படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பின்னர் பாலிவுட்டில் நடிக்கச் சென்று சில படங்களில் நடித்தார். அப்போது தான் சுஷாந்துடன் ரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.புதிய படங்களில் நடிக்க விரும்பும் ரியா தனது நட்பு வட்டாரங்கள் மூலம் இயக்குனர்கள் , தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கேட்டு தூது விட்டு வருகிறார். தென்னிந்தியாவிலும் அவருக்கு சில நட்பு நடிகர்கள் இருப்பதால் அவர்கள் மூலமும் வாய்ப்புக்கு வலை வீசி வருகிறார்.