தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது: அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகத்தில், கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே, வி.முசிறியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மின்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தினார்.

இதன் பிறகு, அவர் பேசியதாவது: தமிழகத்தில் மொத்தம் 132 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 10 புதிய துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு நிதி அளிக்கிறது. மாநிலத்தில் மின் தேவைக்கு ஏற்ப மின் அழுத்தம் ஏற்படுவதை தடுக்க புதியதாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15,343 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. இது தற்போது 15,430 மெகாவாட் மின் நுகர்வு காணப்படுகிறது. கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் வரை மின் நுகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மின் தேவையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் அளிக்கப்படும். கோடை காலத்தில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்துவிடும். இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தில் கோடை காலைத்தில் மின் வெட்டு இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>