நாட்டாமை நடிகர் முதல்வருக்கு எழுதிய கடிதம்.. வெள்ளத்திலிருந்து காப்பாத்துங்க..
கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய நாட்டாமை படத்தில் பெரிய நாட்டாமையாக நடித்தவர் விஜயகுமார். தமிழில் கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து நடித்து வருகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். ரஜினி, கமல் உள்ளிட்ட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்திருப்பதுடன் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் வசித்து வருகிறார்.
2015 ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்த போது இவர் வீட்டிலும் வெள்ளம் புகுந்தது. சுற்று வட்டார பகுதியில் வசித்த நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பல நடிகர்கள் வெள்ளத்தில் சிக்கினர் .அவர்களை மீட்பு படையினர் அப்போது மீட்டனர். சென்னையில் பெரிய ஏரியா செம்பரம்பாக்கம் ஏரி அந்தநேரத்தில் திறந்துவிட்டது வெள்ளத்துக்கு காரணமாகக் கூறப்பட்டது. தற்போது மழை காலம் என்பதால் தினமும் பெய்து வரும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது.
இதுகுறித்து எச்சரிக்கை கடிதம் ஒன்றை முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் எழுதி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015 ஆண்டு டிசம்பர் மாதம், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டபொழுது எங்களது பகுதியிலிருந்து அடையாறு வரைக்கும் பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது. இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 21 அடியை தாண்டி உயர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலைமை நீடிக்குமானால் 2015ம் அண்டை போல் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
ஆகவே தாங்கள் கவனத்தில் இதைக் கொண்டு முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால் கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும். எனவே தயவு கூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டு மென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.தங்களால் இதைச் செய்ய இயலும் என நான் ஒருமனதாக நம்புகிறேன். கொரோனா என்னும் கொடு நோயிலிருந்து நம் தமிழக மக்களை எவ்வண்ணம் காப்பாறி கொண்டிருக்கிறீர்களோ அவ்வண்ணமே கரையோரம் வசிக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.