போதைப் பொருள் தடுப்புத் துறையின் பிடியில் சிக்கிய முக்கிய அரசியல் தலைவரின் மகன்

பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குப் பண உதவி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள மாநில முன்னாள் சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷை தற்போது மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.கேரள மாநில சிபிஎம் செயலாளராக இருந்தவர் கொடியேறி பாலகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற இவர் கடந்த அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு வரை கேரளாவில் சிபியும் மாநிலச் செயலாளராக பினராயி விஜயன் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016ல் பினராயி விஜயன் முதல்வரான போது மாநிலச் செயலாளர் பதவி கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்டது. இவரது மகன் பினீஷ். குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தத் தொழிலும் இவருக்கு இல்லாவிட்டாலும், இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் பல வருடங்களாகவே புகார் கூறப்பட்டு வந்தது.

மோகன்லால், திலீப் உள்பட முக்கிய நடிகர்களுடன் இணைந்து ஒரு சில மலையாளப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பினீஷுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த முகம்மது அனூப் என்பவருக்கு இவர் லட்சக்கணக்கில் பண உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் பினீஷை கைது செய்தனர். பின்னர் இரண்டு வாரங்கள் அவர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

பினீஷின் வங்கிக் கணக்குக்கு கடந்த ஒரு சில வருடங்களில் பல கோடி பணம் முதலீடு செய்யப்பட்டது தெரியவந்தது. போதைப் பொருள் விற்பனை மூலம் இந்த பணம் கிடைத்திருக்கலாம் என மத்திய அமலாக்கத் துறையினர் கருதுகின்றனர். இதற்கிடையே மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பின்னர் பினீஷ் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் பினீஷை திடீரென காவலில் எடுத்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பினீஷுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி போதைப் பொருள் பொருள் தடுப்புத் துறை சார்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம் வரும் 20ம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சிறைக்குச் சென்ற போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் பினீஷை காவலில் எடுத்து விசாரிக்கக் கொண்டு சென்றனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனக் கருதப்படுகிறது.

More News >>