நடிகை பலாத்கார வழக்கு எம்எல்ஏவின் உதவியாளர் நாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராக உத்தரவு
பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாகக் கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் நாளை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காசர்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தனி நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாகச் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகையிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த தனி நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகை புகார் கூறியிருந்தார். அரசுத்தரப்பு சார்பிலும் இதே புகார் கூறப்பட்டது.
இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 20ம் தேதி வரை விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சியான விபின்லால் என்பவரை மிரட்டியதாகக் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து பிரதீப் குமார் மீது காசர்கோடு மாவட்டம் பேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தப் புகார் தொடர்பாக நாளை விசாரணைக்கு வேண்டும் என்று கூறி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். தன்னை போலீசார் கைது செய்யக் கூடும் என்ற அச்சம் பிரதீப் குமாருக்கு ஏற்பட்டதால் முன்ஜாமீன் கோரி அவர் காசர்கோடு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாளை போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுவரை போலீசார் பிரதீப் குமாரைக் கைது செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.