நடிக்க வருகிறார் சானியா மிர்சா.. இம்மாத இறுதியில் முதல் வெப் தொடர் வெளியாகிறது

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நடிக்க வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் காசநோய் விழிப்புணர்வு குறித்த முதல் வெப் தொடர் நவம்பர் இறுதியில் வெளியாகிறது. இந்திய மகளிர் டென்னிசில் மிகச்சிறந்த வீராங்கனைகலில் முதல் இடத்தில் இருப்பவர் சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் 2003ம் ஆண்டு டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இந்தியாவிலிருந்து இவர் மட்டும் தான் உயர்ந்த இடத்தை பெற்றுள்ளார். 2007ம் ஆண்டு இவர் தரவரிசையில் 27வது இடத்தில் இருந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆப்ரோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இவர் 6 தங்கப்பதக்கங்கள் உள்பட 16 பதக்கங்களை வென்றுள்ளார்.

2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் அரை இறுதிப் போட்டி வரை சென்றார். சானியாவுக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் பத்மபூஷன் உட்பட ஏராளமான விருதுகளும் கிடைத்துள்ளன. கடந்த 2012ம் ஆண்டு இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார்.இந்நிலையில் நடிப்பிலும் ஒரு கை பார்க்க சானியா மிர்சா தீர்மானித்துள்ளார். காச நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு வெப் தொடர் மூலம் இவர் நடிப்பில் காலடி எடுத்து வைக்கிறார். 'எம்டிவி நி ஷேதே அலோன் டுகதர்' என்ற வெப் தொடரில் இவர் நடித்து வருகிறார். இம்மாத இறுதியில் இந்த தொடரின் முதல் பாகம் வெளியாகிறது.

இது குறித்து சானியா கூறுகையில், நம்முடைய நாட்டில் காசநோய் ஒரு தீராத நோயாக மாறியுள்ளது. இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவர். எனவே இந்த நோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றார். செய்யது ராசா, பிரியா சவுகான் ஆகியோர் இந்தத் தொடரில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் அஸ்வின் நல்வாடெ, அஸ்வின் முஷ்ரன் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

More News >>