முட்டைக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா? சீன ஆய்வில் தகவல்

சீனா என்றாலே 'கொரோனா'வும், சர்க்கரை நோய் என்றாலே 'இனிப்பு'ம்தான் நம் நினைவுக்கு வருகிறது. கொரோனாவை தவிர பல்வேறு ஆய்வுகளும் சீனாவில் நடந்து வருகின்றன. சீன மருத்துவ பல்கலைக்கழகம், கத்தார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீண்ட ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 1991 முதல் 2009ம் ஆண்டு வரை இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் வழிநடத்தியுள்ளது. சீனாவின் பொது சுகாதார நிபுணரான மிங் லி, அதிகரித்து வரும் சர்க்கரைநோய் தாக்கத்தைக் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இரண்டாம் வகை நீரிழிவுக்கு உணவு பழக்கமே முக்கியமான காரணமாக விளங்குகிறது. ஆகவே, நீரிழிவை உண்டாக்கும் உணவு காரணிகளை சரியாக புரிந்துகொள்வது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

சீனாவில் கடந்த சில காலமாக மக்கள் தானியங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய பாரம்பரிய உணவு வழக்கத்திலிருந்து பதப்படுத்தப்பட்ட இறைச்சி, தின்பண்டங்கள் மற்றும் எரிசக்தி (கலோரி) அடங்கிய உணவுகளுக்கு மாறியுள்ள நிலையில் மிங் லியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. ஆய்வு நடந்த 1991 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் முட்டை சாப்பிடுவோரின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது தெரிய வந்துள்ளது. முட்டை நல்ல சத்துள்ள உணவு. அதில் புரதம் அதிக அளவில் உள்ளது. ஆனால் நீண்டகாலம் தொடர்ந்து அதிக அளவில் முட்டை சாப்பிடுவது நீரிழிவு தாக்கும் வாய்ப்பை அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. சீனாவில் சராசரியாக 50 வயதுடைய 8545 நபர்கள் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒருநாளைக்கு 38 கிராம் என்ற அளவில் தொடர்ந்து நீண்டகாலம் முட்டை சாப்பிட்டு வருபவர்களுக்கு நீரிழிவு தாக்கும் வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் என்றும். ஒருநாளைக்கு ஒரு முட்டை (50 கிராம்) என்ற அளவில் தொடர்ந்து நெடுங்காலம் முட்டை சாப்பிட்டு வருபவர்களை நீரிழிவு தாக்கும் வாய்ப்பு 60 சதவீதம் அதிகம் என்றும் இவ்வாய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு சீன மக்களிடம் செய்யப்பட்டிருந்தாலும், நீரிழிவு வருவதை தடுக்கும் வண்ணம் பல்வேறு உணவுகள் அடங்கிய சமச்சீர் உணவு முறையை கடைபிடிப்பதே நலம்.

More News >>