உண்மையாகவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.. எடப்பாடி திடீர் டென்ஷன்!

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது. முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை குறித்த ஆணையை வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது நீட் தேர்வு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 10,11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். நீட் தேர்வுக்கு 7.5% ஒதுக்கீடு அளித்த விவகாரம் குறித்து பேசும் போது செய்தியாளர் ஒருவர் இடைமறித்து ``7.5% ஒதுக்கீடு அளித்ததை தமிழக அரசு பெருமை பேசுகிறது" எனக் கேள்விகேட்டார்.

இந்த கேள்வியால் டென்ஷனான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ``சரியான கேள்வியை கேளுங்கள். பெருமை பேசுகிறேன் என்று தவறான வார்த்தையில் சொல்லாதீர்கள். நீட் தேர்வுக்கு முன்பு அரசுப் பள்ளிகளிலிருந்து எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்ற கணக்கு உங்களுக்கு தெரியுமா? பெருமை பேசுகிறேன் என்று சொல்லாதீர்கள். நான் உண்மையாகவே இதில் பெருமைகொள்கிறேன். ஏழை, எளிய மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று திடீரென ஆவேசமாக கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

More News >>