ஹச்.. ஹச்... மழைக்காலத்தில் எளிதாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கலாம்!
பெய்யும் மழை வானிலையை முழுவதுமாக மாற்றிவிட்டது. மழையின் காரணமாகக் குளிர் காணப்படுகிறது. பருவ மாற்றத்தின் காரணமாகப் பலரது உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். உடல்நிலை எளிதில் பாதிப்படையாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் ஒரே நாளில் அதிகரித்துவிடாது. தொடர்ந்து அதற்கான உணவு முறையை கடைப்பிடித்து வந்தால் நாளடைவில் உடல் நோய் தாக்குதலைத் தடுக்கும் திறன் வாய்ந்ததாகும்.
நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பொறுத்தமட்டில் உயிர்ச்சத்து சி முக்கியமான தேவையாகும். கோவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்கும், கோவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் வைட்டமின் சி சத்து மிகுந்த உணவுப் பொருள்கள், பழங்களைச் சாப்பிடப் பரிந்துரை செய்யப்படுவதிலிருந்து அதிலிருக்கும் நன்மையை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
வைட்டமின் சி, நோய்த் தொற்று நம்மை அண்டாமல் பாதுகாக்கும். தோல், கூந்தல், நகங்கள் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கவும் இச்சத்து அவசியம். நிலையற்ற அணுக்கள் என்று கூறப்படும் ஃப்ரீ ராடிகல்ஸ் தான் உடலில் தோன்றும் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் காரணமாகின்றன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வரவும் ஃப்ரீ ராடிகல்ஸ் காரணமாகிறது. வைட்டமின் சியிலுள்ள ஆக்ஸிஜனேற்ற தடுப்புப் பண்பு ஃப்ரீ ராடிகல்ஸுக்கு எதிராகச் செயல்படுகிறது.
வைட்டமின் சி அதிகமுள்ள பழம் ஆரஞ்சு ஆகும். 'ஆரஞ்சு' எனக்கூறுவதால் கடைகளில் கிடைக்கும் ஆரஞ்சு பானங்களை வாங்கி அருந்தக்கூடாது. அவற்றில் அதிகமான சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். பதப்படுத்தப்பட்ட அப்பானங்கள், உடலுக்கு நன்மையைக் காட்டிலும் அதிக தீமையையே செய்யும்.
ஆரஞ்சு - கொத்தமல்லி ஜூஸ்
ஆரஞ்சு பழத்துடன் கொத்தமல்லி சேர்த்துச் சாறெடுத்து அருந்துவது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். அதனுடன் காரட்டும் சேர்த்துக்கொள்ளலாம். காரட்டில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துகள் உள்ளன. கொத்தமல்லியில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) அதிகம் உள்ளது.
செய்முறை:
இரண்டு ஆரஞ்சு பழங்களை தோல் உறித்து, இரண்டு கொத்தமல்லி தழைகளை மிக்ஸி அல்லது ஜூஸரில் போடவும். ஒரு கேரட்டை நறுக்கி சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸியில் அடித்து அருந்தவும். சர்க்கரை சேர்க்கக்கூடாது.