சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஒப்புதல் தேவை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..

ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ), எந்த மாநிலத்திலும் குற்றங்கள் குறித்து தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம். அதே சமயம், இந்த அதிகாரத்தை வாபஸ் பெறுவதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மாநில அரசின் ஒப்புதல் பெறாமலேயே எந்த மாநிலத்திலும் சிபிஐ விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு வருமாறு:டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் பிரிவு 6ன் கீழ் மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ அந்த மாநிலத்திற்குள் விசாரணை நடத்த முடியாது.மாநில அரசு இந்த 6வ பிரிவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து விட்டால், சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது.

மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகே விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியிருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டில் டெல்லி சிறப்பு காவல்சட்டப்பிரிவு 6ஐ பயன்படுத்தி, ஆந்திராவுக்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அனுமதியை அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. மத்திய பாஜக அரசு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐயை பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்த்து முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த உத்தரவை பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி இதே உத்தரவை பிறப்பித்தார். தற்போது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கான பொதுவான அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர்.

More News >>