மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் ஊழல்.. தமிழக ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நிபந்தனைகளை மாற்றியதாக கூறப்பட்ட புகாரில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகாசியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரது மனைவி நிஷாந்தினியும் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். ராஜமாணிக்கம், கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர், கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது இவர் கேரள ஐடி உள்கட்டமைப்பு நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக இருந்த போது தான் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

மெட்ரோ ரயிலுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இவரது தலைமையில் தான் நடைபெற்றது. அப்போது கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தும் போது சில நிபந்தனைகளை தளர்த்தி அந்த நிறுவனத்திற்கு சலுகை அளிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்தப் புகார் மீது கேரள அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இதற்கிடையே ராஜமாணிக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூவாற்றுப்புழாவில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக அவர் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் ராஜமாணிக்கத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

More News >>