பாம்பு பிடித்த நடிகர் படத்துக்கு விலங்குகள் நல வாரியம் கெடு..
நடிகர் சிம்பு ஒன்றரை வருடத்துக்குப் பிறகு நடிக்க வந்தார். கொரோனா ஊரடங்கு தளர்வில் உடல் இளைக்கக் கடுமையான பயிற்சி செய்து 30 கிலோ குறைத்தார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படப்பிடிப்பிற்காகத் திண்டுக்கல் சென்று நடித்தார். சில நாட்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் படப் பிடிப்பு நடக்கும் போது ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. பிறகு தீபாவளி தினத்தன்று அதிகாலை ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
மோஷன் போஸ்டரில் நடிகர் சிம்பு பாம்பைத் தோள் மீது போட்டு கையால் பிடித்திருக்கும் காட்சி வெளியானது. அதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் விலங்குகள் நல வாரியத்தில் புகார் செய்தார். இதையடுத்து இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பி வன இலாகா அதிகாரிகள் விசாரித்தாகவும் அது நிஜ பாம்பு இல்லை, பிளாஷ்டிக் பாம்பை கிராபிக்ஸ் உருவாக்கியது என்று விளக்கம் அளித்தார். கிராபிக்ஸ் பணிகள் நடக்கும் போது யாரோ இதைக் கசிய விட்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் போஸ்டர் சிக்கல் தீரவில்லை. விலங்குகளைப் படத்தில் பயன்படுத்த வன விலங்கு நல வாரிய அனுமதி தேவை என்பதால் மீண்டும் சிக்கல் நீடிக்கிறது.
ஆனால் 'ஈஸ்வரன்' குழுவினர் இதற்கான அனுமதியைப் பெறவில்லை என்பதால், வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் மற்றும் டீஸரை உடனடியாக நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.ஈஸ்வரன் படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம், நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது, 'ஈஸ்வரன்' படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரில் கிராஃபிக் ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பை இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறாமல் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.இது விலங்குகள் நலவாரிய விதிகளுக்கு எதிரானது.
எனவே, உடனடியாக ஈஸ்வரன் டிரெய்லர் மற்றும் போஸ்டரை நீக்க வேண்டும். நோட்டீஸ் பெறப்பட்ட 7 நாட்களுக்குள், உரிய அனுமதி பெறாதது குறித்து எழுத்துப் பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த நோட்டிஸில் கூறப்பட்டுள்ளது. விலங்குகள் நல வாரியத்தின் நோட்டீஸ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பார்கள் இது கையை சுற்றிய பாம்பு நழுவிச் செல்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.