கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 5வது கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் சினிமா பார்ப்பதற்கு ரசிகர்கள் யாரும் செல்லவில்லை. அனைத்து தியேட்டர்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்தனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பல தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன. இதனால் சினிமா தியேட்டர்களுக்கு ரசிகர்களைக் கொண்டு வருவதற்காக சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மும்பையில் உள்ள தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்தார். தியேட்டருக்கு செல்வதன் மூலம் கொரோனா பரவாது, எனவே ரசிகர்கள் அனைவரும் தைரியமாக சினிமா தியேட்டருக்கு வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில் கேரளாவிலும் சினிமா தியேட்டர்களை திறக்கவேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து இது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிலிம் சேம்பர், சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவில் தற்போதைய சூழ்நிலையில் சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பு இல்லை. நேரம் வரும் போது அது குறித்து ஆலோசிக்கலாம் என்று கூறினார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

More News >>