தற்கொலைக்கு முயன்றாரா எம்.எல்.ஏ. பூங்கோதை?

முன்னாள் தமிழக அமைச்சரும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா இன்று காலை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவர் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. எனினும் அதுகுறித்து எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவரது குடும்பத்தினரோ அவருக்கு மயக்கம் ஏற்பட்டது சாதாரண உடல்நல கோளாறு தான் என்று சொல்லி வந்தாலும் தொகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் அதை நம்பத் தயாராக இல்லை.பூங்கோதை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் திமுகவில் அவருக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவபத்மநாபனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் என்கிறார்கள்.

வரப்போகும் தேர்தலில் மீண்டும் ஆலங் களத்திலேயே போட்டியிட வேண்டும் என்பது பூங்கோதையின் நோக்கம். அதேபோல் அரசியலில் உச்சத்தை அடையத் தென்காசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது சிவ பத்மநாபனின் இலட்சியம்.ஜெயித்துவிட்டால் அடுத்து அமைச்சர்தான் என்ற கனவில் இருவருமே இருப்பதாகவும் அதன் காரணமாகத்தான் கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்பட்டு உள்ளது என்று எதிர்க்கட்சியினர் சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கடையம் என்ற ஊரில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பூங்கோதையை குறித்து திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாகப் பேசினார். இதை மாவட்டச் செயலாளர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது அதேசமயம் மாவட்டச் செயலாளருக்கு பூங்கோதை உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டக் கோபமடைந்த பூங்கோதை இந்த கூட்டத்தில் எனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கையை உயர்த்தி கும்பிட்டபடி கூட்டத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார். இப்படி இரண்டு மூன்று முறை அவமானப் படுத்தப்பட்டதாக பூங்கோதை ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து தான் பூங்கோதை திடீரென இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து விட்டதாகச் சொல்கிறார்கள் அவர்கள்.பூங்கோதை அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவரின் மருத்துவமனை நிர்வாகம் சென்னை ஸ்டைலில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது விவகாரத்தின் வீரியத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

இதனிடையே தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ள கட்சித் தலைமை நிலைய செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் இதுகுறித்து விசாரித்துச் சொல்லுமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல்.

More News >>