2021 சிறப்பான வருடமாக இருக்கும் 4 மாதத்தில் கோவாக்சின் தயாராகும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
இந்தியாவில் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சினின் மூன்றாவது கட்ட சோதனை நாளை ஹரியானாவில் நடைபெறுகிறது. தற்போது 5 கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கிளினிக்கல் சோதனை கட்டத்தில் உள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள ஆஸ்ட்ரா செனீகா மற்றும் காடிலா ஆகிய தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கிளினிக்கல் பரிசோதனையில் உள்ளன.
பூனாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டும் கிளினிக்கல் பரிசோதனை நடத்தி வருகிறது. டாக்டர் ரெட்டீஸ் பரிசோதனைக் கூடமும் ரஷ்யாவுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து ஆய்வை நடத்தி வருகிறது.இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியது: 2021 இந்திய மக்களுக்கு மிகச் சிறப்பான வருடமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தயாராகிவிடும் என்பது உறுதி.
முதல் கட்டமாக நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். 135 கோடி இந்திய மக்களுக்கும் இந்த தடுப்பு மருந்து கண்டிப்பாக வழங்கப்படும். இந்தியாவில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களில் நோய் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.