10 ஆண்டுகள் சிறை... தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு மற்றோர் சிக்கல்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத். மும்பை குண்டுவெடிப்பில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் என்று தெரிய வரவே அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அதற்கு சரியான ஆதாரம் இல்லை என்று மழுப்பி வந்தது. போதிய ஆதாரம் அளித்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை. தீவிரவாதி ஹபீஸ் சயீத் அங்கு சுதந்திரமாக உலாவினார். மேலும், தீவிரவாதத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசியும் வந்தார்.

இதற்கிடையே, ஹபீஸ் சயீத்துக்கு வேறு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருடன் சேர்த்து ஐமாத் உத் அவா அமைப்பின் தலைவர்கள் மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐமாத் உத் அவா அமைப்பு, தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்காவும், ஐ.நாவும் அறிவித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ஹபீஸ் சயீத்துக்கு பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த 2 வழக்குகளில் தலா ஐந்தரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து லாகூர் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஹபீஸ் சயீத்தின் கூட்டாளி ஜாபர் இக்பாலுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்படுத் குறிப்பிடத்தக்கது.

More News >>