முதல் பந்திலேயே, வலுவான விக்கெட்.. தேஜஸ்விக்கு வந்த வித்தியாச வாழ்த்து!

பீகாரில் பதவியேற்ற மூன்றே நாளில் மாநில கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுதரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பீகாரில் கடும் இழுபறிக்கு இடையே நிதிஷ் குமார் நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக மேவலால் சவுதரி பொறுப்பேற்றார். ஆனால் இவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் ஏற்கனவே இருந்ததால் மேவலாலை அமைச்சராக நியமித்ததற்கு ஆர்ஜேடி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இவர் பகல்பூர் விவசாய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது பணம் வாங்கி ஏராளமானோருக்குப் பதவி அளித்ததாகப் புகார் கூறப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக உதவி பேராசிரியர், இளநிலை விஞ்ஞானி பொறுப்புக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்போது ஜனதா தளத்திலிருந்து மேவலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் இவர் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுத்ததைத் தொடர்ந்து மேவலால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற மூன்றாம் நாளிலேயே பீகாரில் கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவரின் ராஜினாமாவுக்கு காரணம் தேஜஸ்வி யாதவ் கொடுத்த குடைச்சல் தான். ``ஊழல் செய்தவரை அமைச்சராக்கி கல்வித்துறையிலும் ஊழல் புரிய சவுத்ரிக்கு நிதீஷ் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்." என்று கடுமையாக விமர்சித்திருந்தார் தேஜஸ்வி. கூடவே தேசியகீதம் பாடத் தெரியாத வீடியோவையும் வெளியிட்டு பங்கம் செய்திருந்தார். இதனால் அவர் பதவி விலக நேர்ந்தது. இதற்கிடையே, தேஜஸ்வியால் சவுத்ரி பதவி விலகியதை வைத்து, வித்தியாசமாக தேஜஸ்விக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார் அவரின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ். அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில், ``எனது வீரரே, முதல் பந்திலேயே, வலுவான விக்கெட்” ``பேக் டு பெவிலியன்" கிண்டல் செய்து பாராட்டியுள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

More News >>