விரைவில் அமலுக்கு வருகிறது தமிழ்மொழியில் ரயில் டிக்கெட்
தமிழகத்தில், ரயில் டிக்கெட்டுகள் தமிழ்மொழியில் அச்சடித்து வழங்கப்படும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இயங்கி வரும் ரயில் சேவையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் நிலையங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல் சேவை மையம், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைபை, எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட வசதிகளை அமைக்கும் பணிகளை ரயில்வேத் துறை செய்து வருகிறது.
இதேபோல், ரயில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளில் அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான டிக்கெட்டில் ஊர் பெயர்களை அம்மாநில மொழியில் அச்சிடும் திட்டம் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே, தமிழகத்திலும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி இடம் பெற இருக்கிறது. இதற்கான, கணினி தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து உள்ளது. இதனால், தமிழக ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக பொது பிரிவு ரயில் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட்டுகளில் ஊர் பெயர்கள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படும். இந்த திட்டம் ஓரிரு நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ந்து முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளிலும் தமிழ்மொழி அச்சிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com