நடிகை பலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றம் மாற்றப்படுமா? இன்று தெரியும்

பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து கேரள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு முதலில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு பெண் நீதிபதி தலைமையில் இந்த வழக்கைத் தனி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கேரள உயர்நீதிமன்றம் ஒரு பெண் நீதிபதி தலைமையில் தனி நீதிமன்றத்தை அமைத்து உத்தரவிட்டது.

இந்த தனி நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த விசாரணை குறித்த எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது என்று பத்திரிகைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மூடப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகை குற்றம்சாட்டினார். தன்னை அவமானப்படுத்தும் வகையில் எதிர்த் தரப்பு வக்கீல்கள் கேள்வி கேட்டுத் துன்புறுத்தினர் என்றும் அவர் கூறினார்.

எனவே விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கோரி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். மேலும் அரசுத் தரப்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இன்று வரை விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும் வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டுமா என்பது இன்று உத்தரவு பிறப்பிப்பதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதன்படி இந்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவைப் பிறப்பிக்கும் எனக் கருதப்படுகிறது.

More News >>