சபரிமலை கோவிலில் வருமானம் வீழ்ச்சி.. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாமல் திண்டாட்டம்

இந்த மண்டல சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் திண்டாடி வருகிறது. கேரளாவில் முக்கிய கோவில்கள் அனைத்தும் தேவசம் போர்டுகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் குருவாயூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டில் 1,250க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. ஆனால் இதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்துத் தான் மற்ற கோவில்களில் பூஜைகளுக்கான செலவு மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் ஆகியவை கொடுக்கப்பட்டு வருகிறது. சபரிமலை கோவிலில் இருந்து மட்டும் ஒரு வருடத்திற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு நேரடியாக 800 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

இதனால் தேவசம் போர்டு கடந்த பல வருடங்களாக எந்த சிரமமும் இல்லாமல் செயல்பட்டு வந்தது. கோவில்கள் மட்டுமில்லாமல் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ளன. பணம் அதிகளவில் புழங்குவதால் தேவசம் போர்டில் ஊழல்களுக்கும் எந்த பஞ்சமும் கிடையாது. போர்டின் தலைவர், உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்பட பல முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார்களும் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை 7 மாதங்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லாததால் சபரிமலை கோவில் வருமானம் சுத்தமாக குறைந்தது. இந்த 7 மாதத்தில் மட்டும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு 350 கோடிக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருமான இழப்பை மண்டல காலத்திலாவது சரிசெய்து விடலாம் என்று தேவசம் போர்டு நிர்வாகிகள் கருதினர்.

ஆனால் மண்டல காலத்தில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை ஆயிரமாக குறைக்கப்பட்டதால் அந்த எண்ணமும் பலிக்காமல் போனது. கடந்த மண்டல சீசனில் நடை திறக்கப்பட்ட முதல் நாளன்று 3.38 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் தற்போது நடை திறந்து 5 நாட்களாகியும் மொத்த வருமானம் 50 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி செலவுக்கு மட்டுமே 35 லட்சத்திற்கு மேல் ஆகும். மேலும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டும் மாதத்திற்கு 35 கோடி தேவைப்படும். இந்நிலையில் கோவில் வருமானம் கடுமையாக குறைந்துள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று கேரள அரசிடம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கோரிக்கை விடுத்துள்ளது. பக்தர்கள் அதிக அளவில் வந்தால் மட்டுமே வருமானம் அதிகரிக்கும் என்பதால் வருமானத்திற்கு வழி தேடி திருவிதாங்கூர் தேவசம்போர்டு திண்டாடி வருகிறது.

More News >>