செம்மரம் வெட்ட தமிழக தொழிலாளர்கள் வரவழைப்பு : சர்வதேச கும்பலைச் சேர்ந்த இருவர் கைது
செம்மரம் வெட்டுவதற்காகத் தமிழகத்திலிருந்து கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.ஆந்திராவில் செம்மரம் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மரங்களை வெட்டி கடத்துவதற்காகக் கடத்தல்காரர்கள் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களை பெரும் தொகை தருவதாகக் கூறி ஆசை ஏற்படுத்தி ஆந்திராவுக்கு வரவழைக்கின்றனர். அவர்கள் மூலம் செம்மரங்களை வெட்டி தமிழகம், கர்நாடகா வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் இப்படி சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூலித் தொழிலாளர்களை வைத்து செம்மர கடத்தலில் ஈடுபட்டபோது கடத்தல்காரர்களுக்கு ஐ ஜாக் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் ஐந்து தமிழக கூலித் தொழிலாளர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஐ ஜாக் கும்பலில் உள்ள கோவையைச் சேர்ந்த பாஷா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து கூலித் தொழிலாளர்களை அழைத்து வந்து செம்மரக்கடத்தலில் கடப்பா மாவட்டம், கதரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஷேக் சிம்பதி லால் பாஷா (36) ஷேக் சிம்பதி ஜாகிர் (27) ஆகிய இருவர் சர்வதேச அளவில் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் ஷேக் சிம்பதிலால் பாஷா மீது 15 வழக்குகளும், ஷேக் சிம்பதி ஜாகிர் மீது 12 செம்மரக்கடத்தல் வழக்குகளும் உள்ளது. பிரிவைக் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி செம்மரங்களைக் கடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இவர்கள் இருவர் மீதும் கடப்பா மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கடப்ப மாவட்ட எஸ்.பி. அன்புராஜன் தெரிவித்தார்.