நடிகை பலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்தை மாற்ற கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுவதாகப் புகார் கூறப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைக் கேரள உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்த நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகப் பல மாதங்கள் நீதிமன்றம் மூடப்பட்டு இருந்ததால் விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் நடைபெற்றது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகை திடீரென குற்றம்சாட்டினார். இதையடுத்து விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்றவேண்டும் என்றும் கோரி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அரசுத் தரப்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.விசாரணையின் தொடக்கம் முதலே நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக நடந்து வருவதாகவும், விசாரணை நீதிமன்றமும், அரசுத் தரப்பும் இணைந்து செயல்படுவது மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும் அரசுத் தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதி ஒரு பெண்ணாக இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட நடிகையின் மனநிலையைப் புரிந்து கொள்ளவில்லை என்றும், பலமுறை எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் மோசமான கேள்விகளுக்கு நீதிபதி கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவைக் கடந்த இரு வாரங்களுக்கு முன் விசாரித்த உயர்நீதிமன்றம், இன்று வரை விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. மேலும் இது தொடர்பாக இன்று தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி அருண் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தை மாற்ற முடியாது என்றும், அவ்வாறு மாற்றினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று நீதிபதி கூறினார். வரும் 23ம் தேதி முதல் விசாரணையை மீண்டும் தொடங்கலாம் என்றும் விசாரணை நீதிமன்றத்துடன் அரசுத் தரப்பு இணைந்து செல்ல வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>