சபரிமலையில் ஆழித் தீ அணைந்தது மிகவும் அபூர்வமான சம்பவம் என பக்தர்கள் வேதனை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்ததால் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் ஆழி அணைந்தது. இது பக்தர்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. சபரிமலை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டாம்படிக்கு இடதுபுறம் ஒரு ஆழி உள்ளது.

சபரிமலையில் நடைதிறக்கும் நாளன்று இந்த ஆழியில் கோவில் மேல்சாந்தி தீ மூட்டுவார். இதன்பிறகு இந்த ஆழியில் எரியத் தொடங்கும் தீ, நடை என்று சாத்தப்படுகிறதோ அன்று வரை எரிந்து கொண்டிருக்கும். பக்தர்கள் கொண்டு வரும் நெய் தேங்காயை உடைத்து விட்டு பாதியை இந்த ஆழியில் வீசுவார்கள்.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது அவர்கள் வீசும் நெய் தேங்காயால் இந்த ஆழியில் எரியும் தீயின் உயரம் அதிகரித்துக் கொண்டே செல்லும். கடந்த பல வருடங்களாகச் சபரிமலையில் நடை திறந்திருக்கும் எல்லா நாட்களிலும் இந்த ஆழி எரிந்து கொண்டிருக்கும்.இந்நிலையில் வழக்கம் போல மண்டலக் கால பூஜைகளுக்காகக் கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறந்த பின்னர் கோவில் மேல்சாந்தி, ஆழியில் தீ மூட்டினார். இதன் பிறகு தீ எரியத் தொடங்கியது.

ஆனால் இம்முறை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆழியில் வீசப்படும் நெய் தேங்காயும் குறைந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாக ஆழியில் தீ எரியவில்லை. இது பக்தர்களை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது. சபரிமலை கோவில் வரலாற்றில் நடை திறந்திருக்கும் போது ஆழி அணைந்தது கிடையாது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

More News >>