சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட , வயது 15 ஆக நிர்ணயம்...!
இனி முதல் 15 வயது நிரம்பினால் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும். சர்வதேச கிரிக்கெட் வாரியம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் மிகக் குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசாவின் சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இதுவரை வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல் இருந்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் ராசா என்பவர் தான் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடிய இளம்வயது வீரர் ஆவார். இவர் 14 வயதும், 227 நாட்களும் ஆகியிருந்த போது சர்வதேச போட்டியில் அறிமுகமானார். 1996 முதல் 2005 வரை பாகிஸ்தான் அணிக்காக 7 டெஸ்டுகள் மற்றும் 16 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார். இந்திய அணி வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் தான் மிக இளம் வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கியவர்.
இவர் 16 வயதும் 205 நாட்கள் ஆகியிருந்த போது இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கினார்.இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கான வயது வரம்பை நிர்ணயிக்கச் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி தீர்மானித்துள்ளது. இதன்படி 15 வயது நிரம்பினால் மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளிலும் இந்த நிபந்தனை பின்பற்றப்படும். வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐசிசியின் போட்டிகளில் மட்டுமில்லாமல் 3 நாடுகளுக்கு இடையான போட்டிகளிலும் இந்த நிபந்தனை பின்பற்றப்படும். பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இது பொருந்தும். ஆனால் தவிர்க்க முடியாத கட்டங்களில் 15 வயதுக்குக் குறைவான வீரர்களைக் களத்தில் இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்தந்த அணிகள் ஐசிசியிடமிருந்து சிறப்பு அனுமதி வாங்கினால் வீரர்களுக்கு விளையாட அனுமதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.