சிறப்பு சலுகை கிடையாது... சசிகலா விவகாரத்தில் கைவிரித்த கர்நாடகா!
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். வங்கி வரைவோலையை(டிடி )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை ஓரிரு நாளில் செலுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் சசிகலா எந்த நேரம் வேண்டுமானாலும் விடுதலை ஆக வாய்ப்பு இருக்கிறது என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ``ஜனவரி 27-ந் தேதி விடுவிக்கப்படுவார் என்று ஏற்கெனவே ஆர்டிஐயில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இன்னும் 68 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருக்க வேண்டிவரும். அதேநேரம் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் 129 நாட்கள் சலுகை உள்ளது. கர்நாடக சிறை விதிப்படி அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். தற்போது சசிகலா 43 மாத காலம் சிறையில் இருந்துள்ளார். இந்த 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் வைத்தால், 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்படும். இதனால் அவர் எந்த நேரமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம்" என்று அதில் கூறி இருந்தார்.
இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் சசிகலா விடுதலை தொடர்பாக பேசியுள்ளார். அதில், ``சசிகலாவுக்கென விடுதலையில் சிறப்பு சலுகை கொடுக்கப்பட மாட்டாது. சிறைச்சாலை விதிகளின்படி சசிகலா விடுதலை செய்யப்படுவார். சசிகலாவின் விடுதலை சட்டப்படியே முடிவு செய்யப்படும்" எனக் கூறியிருக்கிறார்.