மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை.. பாஜக தேர்தல் பணி ஆரம்பம்..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று(நவ.21) சென்னைக்கு வருகிறார். அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக அவர் வந்தாலும், பாஜகவினருடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் பாஜக தேர்தல் உத்திகளை முடிவு செய்கின்றனர்.பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, இன்று காலை 10.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பிலும், பாஜக கட்சியின் சார்பிலும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்த பின்பு அவர், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்குச் செல்கிறார். வழிநெடுகிலும் பாஜகவின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.மாலை 4.15 மணிக்கு கலைவாணர் அரங்கத்திற்கு வரும் அமைச்சர் அமித்ஷா, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகையில் ரூ.380 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை அமித்ஷா நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு அமித்ஷா வருகிறார். அங்கு தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், தமிழக பாஜகவின் தேர்தல் உத்திகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இதன்பின், முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட சிலர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேருகின்றனர்.

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் குழுவினரும் அமித்ஷாவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் அங்கு வந்து அமித்ஷாவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை 10.15 மணிக்குத் தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.அமித்ஷா வருகையை ஓட்டி சென்னையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, விமான நிலையம், லீலா பேலஸ் ஓட்டல், களைவானர் அரங்கம் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

More News >>