அமெரிக்காவில் பயங்கரம்.. ஷாப்பிங் மாலில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு.. மர்ம ஆசாமிக்கு வலை..
அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அவ்வப்போது தலைதூக்கும். துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்குத் தடை விதிக் வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
எனினும், லைசென்சுக்கு கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படுகிறது. அங்கு திடீர், திடீரென யாராவது மர்ம நபர்கள், கண்டவர்களையும் சுட்டுத் தள்ளும் சம்பவங்கள் நடைபெறும்.இந்நிலையில், நவ.20ம் தேதி மதிய வேளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்கோன்சின் மாநிலத்தில் வாவ்வடோசா என்ற இடத்தில் மே பீல்டு ஷாப்பிங் மால் இருக்கிறது.
இங்கு மேசி ஸ்டோர்ஸ் என்ற கடைக்கு வெளியில் ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதைப் பார்த்து மக்கள் அலறியடித்து மறைவான இடத்தில் பதுங்கினர். அந்த மர்ம நபர் சில வினாடிகளில் அங்கிருந்து மறைந்து விட்டார். இந்த சம்பவத்தில் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாவ்வடோசா தலைமை போலீஸ் அதிகாரி பாரி வெபர் கூறுகையில், மர்மநபர் வெள்ளையினத்து இளைஞர். அவரது அடையாளம் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பியோடி விட்டார். விரைவில் அவரை பிடித்து விடுவோம் என்று தெரிவித்தார்.