12 மணி நேர வேலை மத்திய அரசு பரிந்துரையால் தொழிலாளர்கள் அதிர்ச்சி
நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலை என்பது இனி 12 மணி நேரமாக இருக்கும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பது நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய தொழிலாளர் நலத்துறையின் வரைவு அறிக்கையில் நாளொன்றுக்குத் தொழிலாளர்களின் பணி நேரம் 12 மணியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலச் சட்டங்கள் தற்போது பாஜக அரசால் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கான ஒவ்வொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான வரைவு ஆணைகளும் மக்களின் கருத்துக்காக வெளியிடப்படுகின்றன.
அவ்வகையில் தற்போது பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், சூழல் மேம்பாடு குறித்து ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பாக வரைவு ஆணை நேற்று வெளியாகி உள்ளது. இந்த வரைவு ஆணையில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகளை வழங்க 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த வரைவு ஆணையில் அமைச்சர்கள் குழு தொழிலாளர்களின் பணி நேரத்தைப் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.
இது அனைத்து தொழிலாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உலக அளவில் நாளொன்றுக்கு வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதாகும் . ஆனால் தொழிலாளர்கள் நலச் சட்டங்களைப் பின்பற்றாமல் பல்வேறு நிறுவனங்களும் 10 மணிநேரம் வேலை வழங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிடப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.