போட்டி போட்டுகொண்டு உதவி... மாணவர்கள் விவகாரத்தில் ஸ்டாலின் - எடப்பாடியின் அரசியல்!
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் பட்சத்தில் இப்படி திடீரென அரசாணை வெளி வந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகு இந்த ஆண்டே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த மருத்துவ கலந்தாய்வில் அந்த மாணவர்களுக்கும் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ``நான் உண்மையாகவே இதில் பெருமைகொள்கிறேன். ஏழை, எளிய மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று தனது இந்த திட்டம் குறித்து பேசினார் முதல்வர் எடப்பாடி.
இதற்கிடையே, தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மனிநேரத்தில் இந்த மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். ``கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் என அனைத்தையும் அரசே ஏற்கும். மாணவர்களுக்கு திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம்" என்று தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!