கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவர், 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மது பார்கள் திறப்பதற்கு லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட புகாரில் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் கடந்த உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது 700க்கும் மேற்பட்ட மது பார்கள் மூடப்பட்டன. இதனால் பார் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து மூடப்பட்ட பார்களை திறப்பதற்காகப் பார் உரிமையாளர்கள் அப்போது கலால் துறை அமைச்சராக இருந்த பாபுவை அணுகினர். இதையடுத்து 418 பார்களை மீண்டும் திறக்க அவர் அனுமதி அளித்தார். இந்நிலையில் கேரள மது பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான பிஜு ரமேஷ் என்பவர் சமீபத்தில் ஒரு பரபரப்பு புகாரைக் கூறினார்.

கடந்த ஆட்சியில் 418 மது பார்களை திறப்பதற்காக அப்போதைய உள்துறை அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னித்தலாவுக்கு 1 கோடியும், அமைச்சர் பாபுவுக்கு 50 லட்சமும், அமைச்சர் சிவகுமாருக்கு 20 லட்சமும் கொடுத்ததாகக் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிஜு ரமேஷ், கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்தக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. ரமேஷ் சென்னித்தலாவும், சிவகுமாரும் தற்போது எம்எல்ஏக்களாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய கவர்னரின் அனுமதி தேவையாகும்.

இதையடுத்து கவர்னரிடம் அனுமதி கோரக் கேரள அரசு முடிவு செய்துள்ளது. கவர்னர் அனுமதி அளித்தால் உடனடியாக 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார். தங்கக் கடத்தல் வழக்கில் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாலும், உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதாலும் தான் அரசு இந்த தேவையில்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

More News >>