பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட, 1300 வருடம் பழமையான இந்து கோவில்!

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் மலைப்பகுதியானது, அந்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த மலைப் பகுதியில் இயற்கை சூழல், மதம் சார்ந்த மற்றும் பழக்கவழக்கங்கள் சார்ந்த அழகை ரசிக்க இங்கு உலகில் இருந்து பலரும் படையெடுக்கும் ஒரு முக்கியமான பிரமிப்பான இடமாகும். இந்த மலைப் பகுதியானது பாகிஸ்தான் நாட்டின் அகழ்வாராய்ச்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் புத்த மாதம் சார்ந்த பல கோவில்கள் இங்கு அதிகம் உள்ளன.

ஸ்வாட் மலைப்பகுதியில் பாகிஸ்தானைச் சார்ந்த காலிக் மற்றும் இத்தாலி நாட்டை சார்ந்த மரு.லூகா இருவரும் தொன்மைகளை ஆராயும் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சுமார் 1300 வருடங்கள் பழமையான இந்து கோவில் ஒன்று ஸ்வாட் மலைப் பகுதியின், பாரிகாட் குன்டாய் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் அகழ்வாராய்ச்சி துறையைச் சார்ந்த காலிக் கூறியதாவது, இது ஒரு விஷ்ணு கோவில் என்றும், இது சுமார் 1300 வருடங்களுக்கு முன் இந்து ஷாஹி காலத்தில் இந்து மக்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறினார்.இந்து ஷாஹிஸ் என்பவர்கள் காபூல் ( இப்போதைய கிழக்கு ஆப்கானிஸ்தான்), காந்தாரா( நவீன கால பாகிஸ்தான்) மற்றும் தற்போதைய வடமேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்டவர்கள். மேலும் இந்த அகழ்வாராய்ச்சியின் போது பல காவல்கோபுரங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கூறினார்.மேலும், இந்த கோவிலின் அருகே தண்ணீர் தொட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கோவிலுக்குச் செல்லும் முன் சுத்தம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற இந்துக்களின் நம்பிக்கையைக் குறிப்பதாகும் என்றும் கூறினார்.

மேலும் காலிக் கூறியதாவது, ஸ்வாட் மலை பகுதியானது பல ஆயிரம் வருடங்கள் பழமையானது என்றும், இந்த இடத்தில் இந்து மதம் சார்ந்த தடயங்கள் கிடைப்பது இதுவே முதல் முறை என்றும் கூறினார்.இத்தாலியைச் சார்ந்த அகழ்வாராய்ச்சியாளரான மரு. லூகா கூறுகையில் ஸ்வாட் மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கோவிலானது, காந்தார நாகரிக காலத்தின் கட்டப்பட்ட முதல் கோவிலாகக் கூட இருக்கலாம் என்றார்.

More News >>