திருப்பதி கோயிலில் 7 டன் மலர்களால் சிறப்பு யாகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஆண்டுதோறும் தெலுங்கு வருட கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். 15ம் நூற்றாண்டு முதல் இந்த புஷ்பயாகம் நடத்தப்பட்டு வந்தது . காலப்போக்கில் சில காரணங்களால் இது தடைப்பட்டது .
பின்னர் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் இந்த புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காகத் தமிழ்நாடு கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து மொத்தம் 7 டன் மலர்கள் திருமலைக்கு வந்து சேரும். அங்கு உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கு இந்த மலர்கள் கொண்டு வரப்பட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
திருவோண நட்சத்திரமான இன்று 7 டன் மலர்கள் தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து, பல வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கோயில் முன்பு செயல் அலுவலர் ஜவகர் ரெட்டியிடம் வழங்கப்பட்டது. இதில் சாமந்தி, மல்லி முல்லை தாழம்பூ ரோஜா உள்ளிட்ட 14 வகையான மலர்களும் துளசி மருவம் வில்வம் போன்ற இலைகளும் இடம்பெற்றிருந்தன.
கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபம் எனப்படும் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஜீயர்கள் முன்னிலையில் பால், தயிர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்புத் திருமஞ்சன அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேத பண்டிதர்கள் பாராயணம் படிக்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு மலர்களைக் கொண்டு ம் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது .
ஏழுமலையான் கோவில் உள்புறமும், வெளிப்புறத்திலும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. புஷ்பயாகத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய வழக்கமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டது.