குளிர்கால உடல் கோளாறுகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
குளிர்காலம் வந்தே விட்டது. குளிருடன் இலவச இணைப்பாகச் சளி தொந்தரவு, ஃப்ளூ எனப்படும் தொற்று ஆகியவையும் வரும். பருவநிலை குளிராகவும், பகல் பொழுது குறுகியதாகவும் இருப்பதால் மனநிலையை மகிழ்ச்சியாகப் பேணுவதே மிகவும் கடினம். உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளாததும், குளிருக்குள் வெளியே செல்வதுமே சளி பிடிப்பதற்குக் காரணம் என்பது நெடுங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆனால், அது உண்மையல்ல! பொய்யான நம்பிக்கை அது.
வைரஸ் உள்ளே செல்வதால் சுவாச மண்டலத்தின் மேல்பகுதியில் ஏற்படும் தொற்றுதான் சளி. ஏற்கனவே சளியினால் பாதிக்கப்பட்டுள்ள நபரின் தும்மல், பேசும்போதும், மூக்கை துடைக்கும்போதும் தெறிக்கும் துளிகள் இவற்றால் சாதாரண சளி பரவுகிறது. இதுபோன்ற துளிகள் இருக்கும் கதவு, மேசை, கைப்பிடி போன்ற பரப்புகளைத் தொடுவதாலும் பரவக்கூடும்.
குளிர்காலத்தில் வரும் பொதுவான உடல்நல குறைபாடுகள்:
தொண்டை வலி: தொண்டை வறண்டது போன்ற உணர்வு, உள்ளே சுரண்டுவது போன்ற உணர்வு மற்றும் வலி ஆகியவை தொற்றினாலும் சீதோஷ்ண நிலையின் காரணமாகவும் ஏற்படுகிறது.
ஆஸ்துமா: ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோயாகும். சுவாசப் பாதை அழற்சியின் காரணமாகச் சுருங்கிப்போவதால் இது ஏற்படுகிறது. தும்மல், இருமல், நெஞ்சில் இறுக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஆஸ்துமாவில் இருவகை உள்ளது.
(ஒவ்வாமை) அலர்ஜி: தூசி, மாசு, பெயிண்ட் என்ற வண்ண பூச்சு, புகை போன்ற பொருள்கள், சூழ்நிலை ஒத்துக்கொள்ளாததால் ஏற்படும் ஆஸ்துமா இவ்வகையாகும்.
அலர்ஜியற்ற ஆஸ்துமா: சளி, ஃப்ளூ, மனஅழுத்தம், தீவிர சீதோஷ்ணநிலை மாற்றத்தின் காரணமாகவும் ஆஸ்துமா ஏற்படலாம்.
மூட்டுகளில் வலி:
குளிர்காலத்தில் உடல் அதிக வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் இருதயம் மற்றும் நுரையீரலுக்கு அதிக இரத்தம் பாய்கிறது. அப்படிப் பாய்வதால் கைகள், தோள்பட்டை, மூட்டுகள் ஆகியவற்றிலுள்ள இரத்த நாளங்கள் குறுகி வலியை ஏற்படுத்துகின்றன.
ஃப்ளூ: இன்ஃப்ளூயன்ஸா என்பது தொற்றக்கூடிய சுவாசம் தொடர்பான வைரஸ்களால் ஏற்படுவதாகும். இதன் அறிகுறிகள் மிதமாகவும் சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படக்கூடிய அளவுக்குத் தீவிரமாகவும் இருக்கக்கூடும். அரிதாக மரணமும் நேரிடலாம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை ஃப்ளூ பாதிக்கக்கூடும்.
மாரடைப்பு:
குளிர் நிலவும் மாதங்களில் உடல் வெப்பநிலை குறைவதால் முதியவர்களுக்கு ஆபத்து நேரிடக்கூடும். இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் இதயம் பாதிக்கப்படுகிறது. உடலை வெதுவெதுப்பாகக் காப்பதற்கு இதயம் கடினமாக உழைக்கவேண்டியுள்ளது. இந்த மாற்றம் இரத்தம் உறையவும், இரத்த நாளங்கள் அடர்த்தியாகவும் வழிவகுக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும்.
தடுக்கக்கூடிய முறைகள்
அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும். மாசு உள்ளே செல்லாத வண்ணம் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளவேண்டும். அதிகமான பானங்களை அருந்தவேண்டும். ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிக்கவேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தப் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணவேண்டும்.
முறையாக உடற்பயிற்சி செய்யவேண்டும். நீண்டகாலம் தொடர்ந்து யோகாசனம் மற்றும் நீச்சல் பயிற்சி செய்வது பயனளிக்கும்.
சுய மருத்துவம் செய்துகொள்வதும் மருத்துவ ஆலோசனையின் எதிர் உயிரி (ஆன்டிபயாடிக்) மருந்துகளைச் சாப்பிடுவதும் தவறு.
ஆஸ்துமா மற்றும் நீரிழிவு போன்ற நீண்ட கால நோயுள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.
நாம் சோற்றுடன் சாப்பிடும் ரசம் அருமையான மருத்துவ குணம் கொண்டது. புளியைக் கரைத்து, மிளகு, தக்காளி, சீரகம் போன்றவற்றைப் பயன்படுத்தி ரசம் வைக்கப்படுகிறது. நல்லெண்ணெய், மஞ்சள், தக்காளி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கடுகு, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு ரசம் வைக்கப்படுவதால் மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய உணவாக விளங்குகிறது.
நுரையீரலைச் சுற்றிச் சளி கோழை படிவதை இஞ்சி தடுக்கிறது. சுவாசப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைக்கிறது.