கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்க புதிய ஆப் மத்திய அரசு நடவடிக்கை
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், மருந்தை விநியோகிக்க புதிய 'ஆப் ' உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
ஹரியானாவில் நேற்று தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. இன்னும் நான்கு மாதங்களில் கோவாக்சின் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து முதலில் ராணுவத்தினருக்கும், இதன்பின்னர் சுகாதாரத் துறையினருக்கும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில் தான் பொதுமக்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்படும்.
தடுப்பு மருந்தை வினியோகிக்கும் நடவடிக்கைக்கு முன்னோடியாகப் பிரதமர் நரேந்திர மோடி, நீதி ஆயோக் தலைவர் வி. கே. பால், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் வி.கே. மிஸ்ரா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தடுப்பு மருந்தை வாங்குவது மற்றும் விநியோகிப்பது, யார், யாருக்கு முதலில் தடுப்பு மருந்தைக் கொடுப்பது, மருந்துகளைப் பாதுகாப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்தை விநியோகிப்பதைக் கண்காணிக்க புதிய 'ஆப்' உருவாக்கும் பணியில் மத்திய சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த புதிய ஆப்பின் மூலம் மருந்தின் இருப்பு, எத்தனை பேருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். விரைவில் இந்த புதிய 'ஆப்' வெளியிடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.