முன்னணி நடிகை பலாத்கார வழக்கு நாளை மீண்டும் விசாரணை தொடங்குகிறது

விசாரணை நீதிமன்றத்தை மாற்றக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து நாளை முதல் பலாத்கார வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது. பிரபல மலையாள முன்னணி நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வந்தார். பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று பெண் நீதிபதி தலைமையிலான இந்த தனி நீதிமன்றத்தை அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி முதல் இந்த தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடைபெற்றது.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட நடிகையும், அரசுத் தரப்பும் கடும் குற்றச்சாட்டுகளை கூறியது இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகை புகார் கூறினார். மேலும் இந்த வழக்கின் தொடக்கம் முதலே குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக விசாரணை நீதிமன்றம் நடந்து கொள்வதாகவும், அரசுத் தரப்பும், நீதிமன்றமும் ஒத்துப்போக முடியவில்லை என்றும் அரசுத் தரப்பு சார்பில் குற்றம்சாட்டபட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை நீதிமன்றம் முறையாக செயல்படவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞரே குற்றம் சாட்டியது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்கள் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகை மற்றும் அரசுத்தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும், அவ்வாறு மாற்றினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் நீதிபதி கூறினார். விசாரணை நீதிமன்றத்துடன் அரசுத் தரப்பு இணைந்து செயல்பட வேண்டும் என்றும், 22ம் தேதி முதல் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாளை முதல் நடிகை பலாத்கார வழக்கு விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது. நாளை சில சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>