`சினிமா அதன் அழகை இழந்து வருகிறது!- குமுறும் அமிதாப் பச்சன்
`சினிமா அதன் அழகியல் தன்மையை இழந்து வருகிறது. இது குறித்து இந்தத் துறையில் இருப்பவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.
உலக அளவில் சினிமா எடுத்தல் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், திரும்பவும் `பிலிம் ரோல்’ பயன்படுத்தி சினிமா எடுத்தல் என்பது ஐரோப்பிய திரை உலகில் பிரபலமாகி வருகின்றன. ஹாலிவுட்டைப் பொறுத்த வரையில், பல அறிவியல் புனைவு கதைகளை எடுத்த கிறிஸ்டோஃபர் நோலன், டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு பதில், பிலிம் ரோல் தொழில்நுட்பம் கொண்டே படம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில்தான் அமிதாப் பச்சனும், பிலிம் ரோல் கொண்டு திரைப்படம் எடுப்பது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, `பிலிம் என்ற வார்த்தை அதற்கு இருக்கும் அழகியல் தன்மையை இழந்து வருகிறது. இப்போதெல்லாம், திரைப்படத்தை `பிலிம்’-இல் எடுப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. எல்லாம் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டன.
ஆனால், பிலிம் ரோல் மூலம் படம் எடுத்தபோதுதான் சினிமாவின் மீதான மதிப்பு மிக அதிகமாக இருந்தது. அதில் எடுப்பதுதான் சினிமாவாகவும் இருந்தது. இந்த விஷயம் குறித்து உலகில் சினிமா துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com