கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் கொரோனா அதிகரிக்கும்.. சுகாதாரத் துறை எச்சரிக்கை

கவனக்குறைவாக இருந்தால் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தொடக்க கட்டத்தில் மற்ற மாநிலங்களில் அதிக அளவில் இருந்த போது கேரளாவில் நோய் பரவல் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படியல்ல. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உட்பட மாநிலங்களை விட கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 5,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவுகிறது. தினமும் 25க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர். நேற்று வரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதுவரை 5.75 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் பரவியுள்ளது.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் கட்டுக்கடங்காமல் நோய் பரவுவது கேரள சுகாதாரத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் திருமணம், இறுதிச் சடங்கு உட்பட நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளாவில் அடுத்த மாதம் 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தற்போது மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

வேட்பாளர்களும், தொண்டர்களும் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அரசியல் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பதற்காக வீடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், குழந்தைகளை கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது, கட்டியணைப்பது, கைகுலுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

More News >>