கருணை அடிப்படையில் வேலை: தந்தையின் கழுத்தை அறுத்த மகன்
வேலையின்றி தவித்த மகன், தந்தையின் வேலையை பெறுவதற்காக அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் பர்காகானா என்ற இடத்தில் மத்திய நிலக்கரி சுரங்க பணிமனையில் தலைமை பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணா ராம் (வயது 55). கடந்த வியாழன் அன்று காலை அதிகாலை பணியாளர் குடியிருப்பில் கழுத்து அறுபட்ட நிலையில் கிருஷ்ணா ராமின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் விசாரித்தபோது கிருஷ்ணா ராமின் மூத்த மகன் தந்தையை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கிருஷ்ணா ராமின் மொபைல் போனையும் கத்தி ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பொதுத் துறை நிறுவனமான மத்திய நிலக்கரி சுரங்க லிமிடெட்டில் பணியாளர் இறந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. 35 வயது வரைக்கும் தனக்கு வேலை கிடைக்காத நிலையில் தந்தை இறந்தால் அவரது வேலை கருணை அடிப்படையில் தனக்கு கிடைக்கும் என்று கொலை செய்ததாக மகன் ஒத்துக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.