நியூயார்க்: தண்டவாளத்தில் பெண்ணை தள்ளிவிட்ட இந்திய வம்சாவளி வாலிபர் கைது

அமெரிக்காவில் ரயில் ஒன்று நிலையத்திற்குள் நுழைந்தபோது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியினரான அவர் மீது கொலை முயற்சி சந்தேக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் மன்ஹாட்டன் என்ற இடத்தில் யூனியன் ஸ்கொயர் என்ற பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழன் அன்று அதிகாலை ரயில் நிலையத்தில் லில்லியானா இலோனஸ் என்ற பெண் ஹெட்போன் அணிந்து நின்றுள்ளார். ரயில் நிலையத்தில் நுழையும் சமயத்தில் அவரை நெருங்கிய வாலிபர் ஒருவர், லில்லியானாவிடம் ஏதோ பேச முயற்சிப்பதும் தொடர்ந்து அவரை தண்டவாளத்தில் தள்ளிவிடுவதும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இரண்டு ரயில் தடங்களுக்கு இடையே லில்லியானா விழுந்ததால் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். சம்பவத்தை பார்த்து போலீஸார் விரைந்தபோது அவ்வாலிபர் தரையில் படுத்துக்கொண்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர் ஆதித்யா வேமுலாபட்டி (வயது 24) என்றும் இந்திய வம்சாவளியினரான அவர் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது. ஆதித்யா வேமுலாபட்டி மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரை டிசம்பர் 4ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

More News >>