கொரோனா தடுப்பூசி.. முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை..
கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுப் பணி முடியும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை(நவ.24) ஆலோசனை நடத்துகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் 90 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் பாதித்திருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனம், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளன. தடுப்பு மருந்துகளை மனித உடலில் செலுத்திப் பரிசோதிக்கும் முக்கிய கட்டத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவருக்கும் தடுப்பூசி போடுவது, அதில் யார், யாருக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவை குறித்து மத்திய அரசுத் திட்டம் வகுத்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மோடி நாளை(நவ.24) மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதில் தடுப்பூசி போடும் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது.