கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது : சிபிஐ அதிரடி
பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர் கான் என்பவர் கடந்த ஆண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துத் தலைமறைவானார். ஐ.எம். ஏ. திட்டம் என்ற பெயரில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் பணம் வசூலித்து இந்த மெகா மோசடி நடந்ததாகத் தெரிய வந்தது. பின்னர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் பிடியில் சிக்கிய மன்சூர்கான் தாம் 1600 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் அதில் 400 கோடி ரூபாயை உள்துறை அமைச்சரான ரோஷன் பெய்க்கிற்கு லஞ்சமாகக் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ரோஷன் பெய்க்கிடம் சிபிஐ கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த பண மோசடி குறித்து வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரோஷன் பெய்க் ஸ்டேட்மெண்ட் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளின்படி விசாரணை நடத்திய சிபிஐ அவரை கைது செய்திருக்கிறது.