பந்தய டிராக்கில் டாப்ஸியை ஓடவிடாமல் இழுக்கும் நபர்..
நடிகைகளில் ஸ்ருதி ஹாசன், கங்கனா ரனாவத், சாய் தன்ஷிகா போன்ற சில ஹீரோயின்கள் தாங்கள் ஏற்கும் கதாபாத்திரத்தில் டூப் பயன்படுத்தக் கூடாது என்பதால் தாங்களே வாள் பயிற்சி, சண்டைப் பயிற்சி, குதிரை ஏற்ற பயிற்சி மேற் கொண்டு படங்களில் நடிக்கின்றனர். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் டாப்ஸி. ஆடுகளம் படத்தில் அமைதியாக ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்தவரா இப்படி மாறிவிட்டார் என்று நம்பமுடியாத அளவுக்குத் தனது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு அவர் துப்பாக்கி சுடும் வயதான பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்தார் டாப்ஸி. உண்மைச் சம்பவ கதையான இதில் நடிப்பதற்குமுன் சமந்தப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்துப் பேசி அவர் திறமையை வளர்த்துக் கொண்ட விதம் பற்றிக் கேட்டறிந்ததுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்று அப்படத்தில் நடித்தார். தற்போது குஜராத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ராஷ்மியின் வாழ்க்கை கதையில் நடிக்கிறார்.
இதற்காக டாப்ஸி ஓடு தளத்தில் தினமும் ஓட்டப் பயிற்சி பெறுகிறார். அதுவும் சாதாரணமான பயிற்சி இல்லை, கடுமையான பயிற்சி. இதற்காக பிரத்யேகமாக பயிற்சியாளரை நியமித்திருக்கிறார். அவர் டாப்ஸியின் இடுப்பில் கயிறு கட்டி இழுக்க அந்த இழுவையையும் மீறிக் கொண்டு வலிமையாக இழுத்துக்கொண்டு டாப்ஸி ஓட வேண்டும். இதுதான் பயிற்சி. சோர்வே ஆகாமல் டாப்ஸி விடாமல் பயிற்சி செய்கிறார். தாவி குதிக்கிறார், பாய்ந்து ஓடுகிறார். இதனால் அவரது கால் தொடையில் காயங்கள் ஏற்பட்டன.டாப்ஸி நிஜவீராங்கனை செய்யும் பயிற்சிகளை இதில் செய்கிறார் எனப் பயிற்சியாளர் புகழ்கிறார்.
தனது இணைய தள பக்கத்தில் இதுகுறித்து சில புகைப்படங்களை பகிர்ந்த டாப்ஸி இதுகுறித்து கூறும்போது, ஹோப்.. குதி, ஓடு.. திரும்ப செய்.. இதுதான் பயிற்சி. இதனால் என் காலில் காயங்கள் ஏற்பட்டன. அது யாராலும் தாக்கப்பட்ட காயம் கிடையாது அது தொழில் ரீதியாக பயிற்சியின்போது ஏற்பட்டு தழும்புகள்.. மோதும் களத்தில் நான் என அதிரடியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.டாப்ஸியின் உழைப்பைக் கண்டு ரசிகர்கள் பாராட்டு குவித்து வருகின்றனர்.