உண்மையான இந்துத்துவா யார்? பாஜக-சிவசேனா மோதல்..

சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே யார் உண்மையான இந்துத்துவா கொள்கை உடையவர்கள் என்பதில் மோதல் வலுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீட்டின் போது, சிவசேனா 50:50 என்ற விகிதத்தில் சீட் கேட்டது. இதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பிறகு, தங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் சிவசேனா கேட்டிருக்கிறது. இதற்கு பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. அதனடிப்படையில், சிவசேனாவுக்கு 122 இடங்களை மட்டும் அளித்து விட்டு, பாஜக 150 இடங்களுக்கு மேல் போட்டியிட்டது. ஆனால், பாஜக 105 இடங்களில் வென்றதாலும், சிவசேனாவுக்கு வெறும் 56 இடங்களே கிடைத்ததாலும் முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக மறுத்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) உடைத்து மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயன்றது. அந்த முயற்சி தோற்றுப் போனது. அதே சமயம், காங்கிரஸ்-என்சிபி கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். இதற்கு பின்னர், இந்துத்துவா கொள்கையில் இருந்து சிவசேனா விலகி விட்டதாக பாஜகவினர் அடிக்கடி சீண்டி வருகின்றனர். இதனால், சிவசேனாவும் தனது தீவிர இந்துத்துவா கொள்கையைக் காட்டுவதற்காக ஏதாவது செய்து வருகிறது. இந்நிலையில், மும்பை பந்த்ராவில் கராச்சி ஸ்வீட்ஸ் என்ற பிரபல ஸ்வீட் கடை உள்ளது. சிவசேனா பிரமுகர் நிதின் நந்த்ககோங்கர் என்பவர் அந்த கடை உரிமையாளரிடம் சென்று, கராச்சி என்ற பெயரை மாற்றி, வேறு ஏதாவது பெயரை வையுங்கள் என்று ஒரு வாரம் கெடு விதித்து விட்டு, கடை பெயர்பலகையை மறைக்கச் சொல்லியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில், நாங்கள் அகன்ற பாரதம் அமைப்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஒரு நாள் இந்தியாவுக்குள் வந்து விடும் என்றார். இதற்கு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், பாஜகவினர் முதலில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை மீட்கட்டும். அதற்கு பிறகு அவர்கள் கராச்சியைப் பற்றி பேசலாம். அதே போல், இப்போது லவ் ஜிகாத் என்று பேசத் தொடங்கியுள்ளார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வருகிறார்கள். மகாராஷ்டிராவிலும் அப்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென பேசுகிறார்கள். பீகாரில் நிதிஷ்குமார் எப்போது அந்த சட்டத்தை கொண்டு வருகிறாரோ அப்போது நாங்கள் அதைப் பற்றி யோசிப்போம் என்று தெரிவித்தார்.

More News >>