சைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டம் கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது கேரள அரசு

சைபர் குற்றங்களுக்கு எதிராகக் கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த சட்டம் தற்போதைக்கு அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.சமூக இணையதளங்களில் தனி நபருக்கு எதிராக ஆபாச கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மற்றும் மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராகக் கேரளாவில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சமூக இணையதளங்களில் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மட்டுமே இந்த சட்டம் பாயும் என்று கேரள அரசு கூறியது.

ஆனால் பத்திரிகைகள் மற்றும் டிவிக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று இந்த புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கேரளா முழுவதும் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர் பா சிதம்பரம், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்படப் பல தேசியத் தலைவர்களும் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கேரளாவில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று காங்கிரஸ், பாஜக உள்படக் கட்சியினர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுத் தாக்கல் செய்தார்.இந்த அவசரச் சட்டத்திற்கு சிபிஎம் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் கண்டனம் தெரிவித்தார். சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள அரசிடம் தெரிவித்துள்ளதாக அவர் இன்று டெல்லியில் கூறினார். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து இந்த சட்டத்தை அமல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் தனிநபர் மற்றும் பெண்களுக்கு எதிராக சமூக இணையதளங்களில் மோசமான கருத்துக்களைப் பதிவிடுவது அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே இதுபோன்ற மோசமான செயல்களைத் தடுப்பதற்காகவே இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் சில தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு வந்ததால் இந்த சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சிகளுடன் இது குறித்து ஆலோசித்துத் தகுந்த மாற்றங்களுடன் இந்த சட்டம் கொண்டுவரப்படும். இவ்வாறு பினராயி விஜயன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>