கொரோனா நிலைமை மோசமாகிறது நடவடிக்கையை தீவிரப்படுத்தாவிட்டால் பெரும் ஆபத்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் நோய் பரவல் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வந்தது சற்று நிம்மதியை ஏற்படுத்தியது.
ஆனால் கடந்த சில தினங்களாக நோய் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகத் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை விடக் குறைந்து இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாகச் சற்று அதிகரித்து நோயாளிகள் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் நோய் பரவல் இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு டிவிஷன் பெஞ்ச் கவலை தெரிவித்தது.நம் நாட்டில் கொரோனா பரவல் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வரப்போகும் ஆபத்தைத் தெரிந்து கொண்டு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் டிசம்பர் மாதத்தில் நம் நாட்டின் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.
டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த இரு மாநிலங்களும் கண்டிப்பாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையும், கவனமும் இல்லாவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும். அடுத்த மாதம் நோயாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெல்லி, குஜராத், அசாம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு நாளில் ஏற்பட்ட நோய் பரவல் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் கூறியது.