துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயாரா?.. ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி!
அமித் ஷா சென்னை வந்திருந்தபோது திமுகவை குறிவைத்து பேசினார். `திமுக ஊழல் கட்சி, வாரிசு அரசியல் செய்யும் கட்சி" என்று பேசினார். அமித் ஷாவின் பேச்சுக்கு பதில் கொடுத்த ஸ்டாலின், ``நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை உறவினர்களை பினாமிகளைக் கொண்டு அரசு கஜானாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே வாரிசு அரசியல் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். அதில், ``அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவதில் தவறில்லை. எனது மகனை நான் அரசியலுக்கு கொண்டுவரவில்லை. ஜெயலலிதா தான் எனது மகனை அரசியலுக்கு கொண்டுவந்தார். திமுகவில் வழி வழியாக வாரிசு அரசியல் செய்து வருகின்றனர். அதிமுகவில் அப்படி இல்லை. அதிமுகவில் கொடி பிடித்தவர் கூட முதல்வராக முடியும். திமுகவில் அது முடியுமா. துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் தயாரா. உதயநிதியை வேண்டுமானால் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார். துரைமுருகனை அறிவிக்க மாட்டார்" எனக் கூறியுள்ளார்.