இந்திய வீரர்கள் வம்புக்கு வந்தாலும் நாங்கள் வாயே திறக்க மாட்டோம் வார்னர் கூறுகிறார்

ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் எப்படி வம்புக்கு இழுத்தாலும் நாங்கள் வாயே திறக்க மாட்டோம் என்கிறார் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்காக சென்றுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 27ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முடிந்த பின்னர் டி20 போட்டிகள் நடைபெறும். அதுவும் முடிந்த பின்னர் தான் டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு பொதுவாக ஒரு பழக்கம் உண்டு.

எதிரணியினரை தேவையில்லாமல் எதையாவது பேசி வம்புக்கு இழுத்து அவர்களது கவனத்தை திசை திருப்பி ஆட்டமிழக்க செய்வார்கள். இந்த பாணியை ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களிடமும் பிரயோகிப்பது உண்டு. ஆனால் இந்த முறை நாங்கள் தேவையில்லாமல் இந்திய வீரர்களை வம்புக்கு இழுக்க மாட்டோம், நல்ல பிள்ளைகளாக இருப்போம் என்கிறார் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். அவர் கூறியது: இந்த முறை நாங்கள் இந்திய அணியிடம் எங்களது வழக்கமான பாணியை கையாளப் போவதில்லை. அவர்கள் வம்புக்கு இழுத்தாலும் நாங்கள் வாய் திறக்காமல் அமைதியாக இருப்போம். விளையாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்துவோம். எந்த சந்தர்ப்பத்திலும் எங்களது உணர்ச்சிகளை நாங்கள் வெளிக்காட்ட மாட்டோம்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் விராட் கோஹ்லி இந்தியா திரும்ப உள்ளார். அவர் சென்ற பின்னர் நாங்கள் எங்களது தந்திரங்களை மாற்றி விடுவோம். துணை கேப்டன் ரகானே தான் மீதமுள்ள போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரகானேவுக்கு கிரிக்கெட் தந்திரங்கள் நன்றாகவே தெரியும். அவர் மிகவும் அமைதியான வீரர். ரோகித் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பலவீனமாக இருக்கும் என்றே கருதுகிறேன். கேஎல் ராகுல், ஷிகர் தவான், மாயங்க் அகர்வால் ஆகியோர் தற்போது நன்றாக ஆடி வருகின்றனர். இந்திய அணியில் எப்போதும் மூன்று அல்லது நான்கு வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். இந்திய அணி சிறப்பானது தான் என்றாலும், அவர்களை தோற்கடிக்க நாங்கள் கண்டிப்பாக முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>