அமெரிக்காவில் கிரிக்கெட் திருவிழா: ஆரம்பமாகிறது மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி - Minnesota Tennis Ball Cricket #MTBC
இந்தியாவில் ஐபிஎல் ஜுரம் ரசிகர்களிடையே தொற்றிக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ்சும் ஐபிஎல்லில் களம் இறங்கி உள்ளதால் போட்டிக்களம் சூடுபிடித்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போன்று அமெரிக்காவில் வரும் மே மாதம் முதல் வாரத்தில் கிரிக்கெட் திருவிழா நடைபெற இருக்கிறது. அது தான், மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி. இதில், களம் இறங்க, 54 அணிகள் தயார் நிலையில் உள்ளனர்.
அமெரிக்காவில், மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி கடந்த 2002ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. முதல் ஆண்டில் ஆறு அணிகள் மட்டுமே போட்டியிட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 54 அணிகள் விளையாட உள்ளது.
மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் 2018ம் ஆண்டுக்கான போட்டி வரும் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில், லீக் போட்டிகள் முதலில் நடைபெறும். இதில், வெற்றிப் பெற்ற அணிகள் காலிறுதிப்போட்டி, அரையிறுதிப் போட்டி பின்னர் இறுதிப் போட்டிகளில் விளையாடுவார்கள். இறுதியில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச இந்தியர்களும், 50 சதவீத தமிழர்களும் கலந்துக் கொள்ளும் இந்த போட்டியில், நேபாளத்தை சேர்ந்த அணியினர் இந்த ஆண்டு முதல்முறையாக பங்கேற்கின்றனர். பாகிஸ்தான், இலங்கை நாடுகளை சேர்ந்த வீரர்களும் போட்டியில் மோதுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து பணிநிமித்தமாக அமெரிக்கா வரும் பணியாளர்கள், கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தினால் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அணியின் கேப்டன்களுக்கான கூட்டம் அமெரிக்காவில் உள்ள இகன் லைப்ரரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 54 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர். போட்டிகள் நடைபெறும் தேதி, மோதும் அணிகள் உள்பட போட்டிக்கான முழு திட்டம் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. இந்தப் போட்டிகள் மின்னசோட்டாவில் உள்ள ட்வின் சிட்டீஸ் பகுதியின் 15 இடங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆண்கள் அணி மட்டுமே கலந்துக்கொள்ளும் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி போன்று மகளிர் அணிக்கான கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com